வியாழன், 3 மார்ச், 2016

யோக நரசிம்மர் திருக்கோயில்

அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில்.
தொன்மையான குடைவரைக் கோவில். இக்கோவில் மதுரைப் பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் (கி.பி. 8ஆம் நூற்றாண்டு) காலத்தில் அவரது அமைச்சரான மதுரகவி என்ற மாறன் காரி என்பவரால் கி.பி. 770இல் உருவாக்கப்பட்டது. மாறங்காரியின் சகோதரர் மாறன் எயினன் இக்கோவிலுக்கு ஒரு முகமண்டபத்தைக் கட்டினார்.
கருவறையிலுள்ள நரசிங்கப் பெருமாளின் பெரிய (ஆறரை அடி உயரமுள்ள )திருவுருவம் ஆனைமலையின் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும்.
இக்கோயிலின் மூலவராக யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும், நரசிங்கவல்லிதாயார் தெற்கு பார்த்தும் அமர்ந்துள்ளனர். கோயிலில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரின் சன்னதி தனியாக உள்ளது. யோக நரசிம்மர் கோயிலின் முகப்பில் அழகான குளம் அமைந்துள்ளது. இது, நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய உருவம் உடைய கோயிலாகும். இக்கோயிலை ஒட்டியுள்ள மலையில் சமணர் படுகைகள் அமைந்துள்ளது.
இங்கு
மூலவர் -- யோக நரசிம்மர்
தாயார் -- நரசிங்கவல்லி
முகவரி அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில்,
யானைமலை, ஒத்தக்கடை - மதுரை மாவட்டம்.
கோயில் சிறப்பு
ரோமச முனிவர் தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி இங்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகத்தை தொடங்கினார். அப்போது நரசிம்ம மூர்த்தியை அவரது அவதார காலத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தரிசிக்க ஆசைப்பட்டார். இவரது ஆசையை நிறைவேற்ற பெருமாள் உக்கிர நரசிம்மராக காட்சி தந்தார். உக்கிர கோல வெப்பத்தால் உலகே தத்தளித்தது. தேவர்களும், முனிவர்களும் பயந்து நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்க வர வேண்டுமென பிரகலாதனிடம் கேட்டுக் கொண்டனர்.பிரகலாதனும் இத்தலத்துக்கு வந்தான். அப்போது. நரசிம்மரின் உக்கிரம் குறைந்ததே தவிர முற்றிலுமாக நீங்கவில்லை. எனவே மகாலட்சுமியிடம் விஷயத்தை கூறினர் தேவர்கள்.உலகைக் காக்கும் அந்தத் தாயார் வந்ததுமே, உக்கிர நரசிம்மரின் கோபம் தணிந்தது. அத்துடன் அவளை ஆலிங்கனம் செய்து யோகநரசிம்மராக கேட்டதையெல்லாம் தருபவராக அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோயிலில் கொடி மரம் கிடையாது, ஏனெனில் கொடிமரம் என்பது, கருவறைக்கு மேலுள்ள விமானத்தின் நீள அகல அளவைப்பொறுத்தே அமையும். இத்தலத்தில் கருவறைக்கு மேல் யானைமலை மிகவும் உயர்த்து இருப்பதால் கொடிமரம் வைக்கவில்லை என கூறப்படுகிறது.
நீங்கள் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை செய்திருப்பீர்கள் ஆனால், விஷ்ணு கோயிலான இங்கும் மிகச்சிறப்பாக பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.
நரசிம்மர் அவதாரம் எடுத்தது தேய்பிறை சதுர்த்தி பிரதோஷ காலத்தில் தான். எனவே, அந்த நேரத்தில் இந்த யோக நரசிம்மரை வழிபட்டால் கல்வி சிறக்கும், வியாபாரம் விருத்தியாகும், எதிாி பயம் இருக்காது, மரணபயம் நீங்கம்.
தாயார் நரசிங்கவல்லியை இந்நேரத்தில் வேண்டினால் ( கழுத்தில் உள்ள தாலியை தரிசித்து) திருமணத்தடை நீங்கும். கோபக்கார கணவன் இங்கு வழிபட்டால் மனைவியை நெஞ்சில் தாங்கும் சாந்த சொரூபியாகி விடுவார் என்பது நம்பிக்கை.
SRJ Astrology, Numerology, Gemology, Vastu Shastra's photo.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக