வியாழன், 13 ஜூலை, 2017

வளமான வாழ்க்கைக்கு சித்தர்களால் சொல்லப்பட்ட மாந்திரீக தாந்திரீக ரகசிய 20 பரிகார முறைகள்.

1. முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

2. புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

3. வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.

4. கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.

5. வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு கடையை மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.

6. வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.

7. அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.

(8)செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.

9. 7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.

10. வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.

11. ஆரஞ்சு மரத்தின் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.

12. படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.

13. வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை, வசீகர சக்தியைப் பாதிக்கும்.
வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும். இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.

14. உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..

15. உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல்
போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்

16. சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில்
போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும்
ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .

17. வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்

18. கோவில் கொடி, கொடிமரம், கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள். இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.
இதற்குப் பரிகாரம்:-
வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று.

19. சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.
இதற்குப் பரிகாரம்:-
ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு "ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய" என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்

20. கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.

புதன், 12 ஜூலை, 2017

குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக..

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.
2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.
3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.
4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.
5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.
8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.
11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.
அன்னதோஷம்
இது யாரையெல்லாம் பிடிக்கும் தெரியுமா
** கர்ப்பிணிகள் வந்து பசி என்று பிச்சை கேட்கும் போது, அவர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்களை
** பசியால் வாடும் பச்சிளம் பாலகர்களுக்குப் புசிப்பதற்கு எதுவும் கொடுக்காதவர்களை
** உணவு உட்கொள்ள அமர்ந்தவர்களைக் கோபித்து, உணவைச் சாப்பிடவிடாமல் விரட்டி அடிப்பவர்களை
** தான் உண்டது போக ஏராளமான அன்னம் கைவசம் இருந்தும், அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் எறிபவர்களை
** அன்னத்தை வீணடிப்பது
** பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காதவர்கள்
இவர்களுக்கு அன்னதோஷம் பீடிக்கும்.
அன்னதோஷம் பீடித்தால் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம்தங்காது; தரித்திரம் ஆட்டிப்படைக்கும்.
இதற்கு அன்னபூரணி விரதம் இருந்து மேலே சொன்ன செயல்களைச் செய்யாமல், பசியென்று வருவோர்க்கு உணவளித்துவர வீட்டில் செல்வம் தங்கும்.
இந்து தர்ம சாஸ்திரம் 16 சடங்குகள்.

இந்துக்கள் தங்களின் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சில சடங்குகளை தர்மநூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. சடங்கு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி எனப் பொருள்படும். சடங்குகளை எளிமையான முறையில் மேற்கொள்வதே சிறப்பாகும். இவை சம்ஸ்காரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ’சம்ஸ்காரம்’ என்றால் முறைப்படுத்துதல் (அ) தயார்படுத்துதல் எனப் பொருள்படும். கிரியசூத்திர நூல் 16 புற சடங்குகளை விவரிக்கின்றது. இந்த பதினாறு சடங்குகளும் புறத்தில் செய்யப்பட வேண்டியவை. அகத்தில் செய்யப்பட வேண்டிய எட்டு சடங்குகளையும் இந்நூல் விளக்குகின்றது. இவை கௌதமர் தர்மசூத்திரம் (8:14-8:25) இலும் விளக்கப்பட்டுள்ளன.

அகத்தின் எட்டு (8) சடங்குகள்:
1) எல்லா உயிர்களிடமும் கருணை
2) பொறுமை
3) பொறாமை இல்லாமை
4) மனத்தூய்மை
5) சாந்தம்
6) நல்ல எண்ணங்களைக் கொண்டிருத்தல்
7) தாராளகுணம்
8) பேராசை இல்லாமை

புறத்தின் பதினாறு (16) சடங்குகள்:

1) திருமணம் (விவாகம்) – தகுதிபெற்ற வயதினை உடைய ஓர் ஆண் ஒரு பெண்ணின் கரங்களைப் பற்றி அக்கினி சாட்சியாக ஏழு முறை அக்கினியைச் சுற்றி வருதல். இறைவன் ஜோதிவடிவானவர். எனவே அக்கினியான ஜோதியை சாட்சியாக கொண்டு திருமணம் நடக்கின்றது. தமிழர்களின் திருமணத்தின் போது மணமகன் மணமகள் கழுத்தில் தாலி அணிவிக்கிறான். இது மிகவும் முக்கிய சடங்கு ஆகும். பெரும்பாலான இந்துக்கள் வாழ்நாளில் இந்த சடங்கு மிக முக்கியமானதாக மேற்கொள்ளப்படுகின்றது.

2) முதல் இரவு (கர்பதானம்) – திருமணமான ஆணும் பெண்ணும் குழந்தை பாக்கியத்தைப் பெறுவதற்காக இறைவனை பிரார்த்தனை செய்துகொண்டு தாம்பத்திய பந்தத்தில் ஈடுபடுதல். தாயான பெண் ஓர் உயிர் தன் உடலில் தங்கி உடலாக உருவெடுப்பதற்கு தன் கருவறையைத் ‘தானமாக’ தருகிறாள். கணவனும் மனைவியும் விளக்கேற்றி இறைவனை மனதார வழிபட்டு வாழ்க்கையைத் துவங்குவதன் மூலம் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.

3) கருவுற்றல் (பும்சவனம்) – கருவுற்ற மனைவி தாய் ஸ்தானத்தை அடைகிறாள். எனவே கணவன் அவளை தாயைப் போல பராமரித்து பணிவிடை செய்யவேண்டும். அவள் மனம் நோகும்படி ஒரு வார்த்தை கூட பேசாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். பிருகதாரண்யக உபநிடதம் (6.4), மனைவி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவன் அவளுக்கு ஆரோக்கியமான உணவைச் சமைத்துக் கொடுக்க வேண்டும் (அல்லது ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்) என அறிவுரை செய்கின்றது. கணவன் மனைவிக்காக பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். தன் மனைவி குழந்தையை நலமாகப் பெற்றெடுக்கும் வரை இந்த சடங்கை கடைப்பிடிக்க வேண்டும்.

4) வளைக்காப்பு (சீமந்தம்) – கருவுற்ற பெண் எந்தவொரு சிரமமும் இல்லாமல் மனமகிழ்ச்சியுடன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முக்கிய சடங்காகும். பெரும்பாலும் 8-ஆவது அல்லது 9-ஆவது மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. கர்ப்பமாக இருக்கும் பெண்மணிக்கு அவளின் உறவினர்களும் நண்பர்களும் பழங்களும் பலகாரங்களும் ஊட்டிவிட்டு மகிழ்ச்சிப் படுத்துவார்கள். மேலும் வளையல்களும் அணிவிப்பார்கள். கர்ப்பிணி பெண் ஆசைபடும் அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும், அவளுக்கு வருத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்த்துவிட வேண்டும் என யஜ்ஞவல்கய ஸ்மிரிதி (3:79) தெரிவிக்கின்றது. மேலும் பிரசவ காலம் நெருங்கும் போது அவளின் கணவன் (மற்றும் பெற்றோர்) எப்போதும் அவளின் அருகாமையில் இருக்கவேண்டும் என்றும் நீண்டதூரப் பயணத்தை தவிர்த்து விட வேண்டும் எனவும் அறிவுரைக்கப்படுகின்றது. இது மிக முக்கியமான சடங்கு.

5) குழந்தை பிறந்த சடங்கு (ஜாதகர்மன்) – குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் சடங்காகும். இந்துதர்மத்தைப் பொறுத்தவரை ஒருவன் இரண்டு முறை பிறக்கின்றான். தாயின் கருவறையில் தோன்றி பிறப்பது ஒருமுறை, கல்வியைத் தொடங்கும் போதும் இரண்டாவது முறை ஆகும். பிறந்த குழந்தையின் நாவில் தேன் அல்லது சீனிப்பாகு தடவி இச்சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சடங்கை வீட்டிலுள்ள பெரியவர்கள் அல்லது குழந்தையின் தாய்தந்தை மேற்கொள்வர். அதன்பிறகு அனைவரும் குழந்தையின் நீண்ட ஆயுள், நிறைவான அறிவு மற்றும் தாயின் நலம் ஆகியவற்றிற்காக பிரார்த்தனை மேற்கொள்வர்.

6) குழந்தைக்குப் பெயர்சூட்டுதல் (நாமகரணம்) – குழந்தை பிறந்த சில தினங்களில் குழந்தைக்குப் பெயர்சூட்டப்படுகின்றது. அர்த்தமுள்ள மற்றும் இனிமையான பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்குச் சூட்டுவர். குழந்தையை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, வீட்டு பூஜை அறையில் குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையை மடியில் அமர வைத்து அதன் காதில் தேர்ந்தெடுத்த பெயரை செப்புவார்கள்.

7) குழந்தையை முதன்முதலில் வெளியிடத்துக்கு அழைத்துச் செல்லுதல் (நிஷ்கிராமணம்) – குழந்தை பிறந்து ஒரு மாதம் நிறைவடைந்ததும் அந்தக் குழந்தையைக் கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள். குழந்தையின் தாய், தந்தை, சகோதரர்கள், தாத்தா, பாட்டி ஆகியோரும் உடன் செல்வார்கள்.

8) குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுதல் (அன்னபிராஷனம்) – குழந்தை பிறந்து சில மாதங்களில், குழந்தைக்கு சில பற்கள் முளைக்க தொடங்கியவுடன் அதற்கு சோறு ஊட்டும் சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. தேனுடன் அல்லது பாலுடன் கலந்த சோற்றை அன்னையும் தந்தையும், உற்றார் உறவினரும் குழந்தைக்கு ஊட்டுவார்கள். பிறகு நண்பர்களும் அண்டை அயலார்களும் வருகைபுரிந்து குழந்தையுடன் அன்பு பரிமாறிக் கொள்வார்கள். அனைவரும் குழந்தை நீண்ட ஆயுளும் நிறைவான அறிவையும் பெற பிரார்த்தணை செய்து கொள்வார்கள்.

9) குழந்தைக்கு தலைமுடி நீக்குதல் (சூடாகரணம்) – குழந்தை பிறந்த சில மாதங்களில், குழந்தையின் தலைமுடி முதன்முதலில் நீக்கப்படுகின்றது. தாய் தந்தையர் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு குழந்தையை கோவிலுக்கு அழைத்துச் சென்று மடியில் அமர்த்திக் கொண்டு குழந்தையின் தலைமுடியை நீக்குவர். தூய்மையான வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.

10) குழந்தைக்குக் காது குத்துதல் (கர்ணவேதம்) – குழந்தை பிறந்த ஓராண்டில், குழந்தையின் இரண்டு காதுகளிலும் தோடு குத்தப்படும். ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ எனும் குறளைப் போல ஒரு மனிதனிடம் இருக்கும் செல்வங்களில் மிகவும் போற்றத்தக்கது அவனின் கேட்டல் திறன் தான். ஒருவன் தன் வாழ்நாளில் ஞானிகளின் வாய்ச்சொல்லைக் கேட்டு நடந்தால் அவனின் வாழ்க்கை பொன்போல மின்னும் என்பதை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.

11) கல்வி ஆரம்பம் (வித்யாரம்பம்) – குழந்தை மழலைமொழி பேசத் தொடங்கியவுடன் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தையின் பெற்றோர் அல்லது மற்ற குடும்ப உறுப்பினர் குழந்தையின் கையைப் பிடித்து ‘அ’ எனும் முதல் எழுத்தை எழுதி பயில்விப்பார்கள். பிறகு அடிப்படையான எழுத்துகளையும் எண்களையும் கற்றுத் தருவார்கள். குழந்தை பாடசாலையில் சேர்ந்து முறையான கல்வியைக் கற்க துவங்குவதற்கு முன்னர் அதற்கு அடிப்படையான கல்வியை வீட்டிலே கற்றுத் தர வேண்டும் என்பதை இச்சடங்கு உணர்த்துகின்றது.

12) பாடசாலையில் சேர்த்தல் (உபநயனம்) – குழந்தை வளர்ந்து பாலகப் பருவம் எய்தியவுடன், அவனை/அவளை பாடசாலையில் சேர்க்க வேண்டும். இங்கு அந்த குழந்தை முறையான கல்வியைக் கற்க தொடங்கும். முறையான கல்வியை துவங்கும் போது ஒரு மனிதன் இரண்டாவது முறையாகப் பிறக்கின்றான் என சொல்லப்படுகின்றது. கல்வி கற்றுத்தரும் ஆசான் அவனுக்கு தாய்தந்தை ஆகின்றார். ஆரம்பகாலங்களில் உபநயனம் என்பது ஒருவன் யஜ்ஞோபவிதம் (பூணூல்) அணிந்து முறையான குருகுல கல்வியில் ஈடுபடுதல் ஆகும். இந்த சடங்கின் மூலம் அந்த குழந்தைக்கு கல்வியின் முக்கியத்துவமும் அவசியமும் உணர்த்தப்படுகின்றது. கல்வி தான் ஒருவனை பண்டிதனாக்குகின்றது. எனவே கல்வியில் தேர்ச்சிப் பெறும்வரை அவனுடைய எண்ணம் வெண்மையாக (தூய்மையாக) இருக்கவேண்டும்; தீமையானவற்றில் எண்ணம் சிதறி மாசுபடக் கூடாது எனவும் உணர்த்தப்படுகின்றது.

13) வேதங்களைக் கற்க தொடங்குதல் (வேதாரம்பம்) –வேதங்கள் என்பது ரிக், சாம, யஜுர், அதர்வண ஆகியவை ஆகும். வேதம் என்றால் ஞானம் எனப் பொருள்படும். வேதங்களின் சாரமாக உபநிடதங்களும், உபநிடதங்களின் சாரமாக பகவத் கீதையும் விளங்குகின்றன. ஒருவன் தன் வாழ்க்கைக்குத் தேவையான வித்தைகளை (தொழில்திறன்களை) கற்றதோடு விட்டுவிடாமல், அவன் வேதங்களையும் அவசியம் கற்க வேண்டும். மேலும் திருக்குறள், திருமுறை, பிரபந்தம் போன்ற நூல்களும் நல்லறிவை தரும் நூல்களாகும். ஒருவன் வாழ்க்கையில் பணம் ஈட்டுவதற்கு தேவையான வித்தைகளை மட்டும் கற்பதோடு நிறுத்திவிடாமல் நல்லொழுக்கத்தையும் நல்லறிவையும் தரும் நல்லநூல்களையும் கற்கவேண்டும்.

14) பருவமடைந்த சடங்கு (கேஷாந்தம்) – ஆரம்பகாலங்களில் ஆண்களும் பெண்களும் பருவமடைந்தவுடன் ‘கேஷாந்தம்’ அல்லது ’ரிதுசுத்தி’ எனப்படும் சடங்கு மேற்கொள்ளப்பட்டன. பருவ வயதை (பெரும்பாலும் 16 வயதை) அடைந்த ஆணின் சிகையும் முகத்திலுள்ள முடிகளும் மழிக்கப்படும். பிறகு நீராடி விட்டு, பாரம்பரிய உடை அணிந்துகொண்டு, இனி அவனுக்கு உண்டாகும் பாலுணர்வு ஆசைகளை எப்போதும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க விரதம் மேற்கொள்கிறான். அதேபோல் பருவமடைந்த பெண்களும் நீராடிவிட்டு பாரம்பரிய உடை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். பண்டைய காலத்தில் இது எளிமையான ஒரு சடங்கு ஆகும். ஆனால் தற்போது இந்த சடங்கு ஆண்களுக்காக மேற்கொள்ளப்படுவது மிக அரிதாகும். ஆயினும் பெண்களுக்கு மிகவும் பெரிதாகவும் ஆடம்பரமாகவும் மேற்கொள்ளப்படுகின்றது. காலப்போக்கில் இந்த சடங்கில் சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்படாத நிறைய விஷயங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.

15) பட்டம் பெறுதல் (சமாவர்தனம்) – உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி அடைந்து பட்டம் பெறும் சடங்காகும். இது பெரும்பாலும் ஒருவன் உயர்கல்வியை முடித்துவிட்டப் பின்னர் மேற்கொள்ளப்படுகின்றது. பட்டம் பெற்றவிட்ட அவன் எப்போதும் சத்தியத்தையும் தர்மத்தையும் போற்ற வேண்டும், நேர்மையையும் கடமையையும் கடைப்பிடிக்க வேண்டும், முக்கியமான ஒன்று என்னவென்றால் அவன் எப்போதும் கற்பதை நிறுத்தக் கூடாது என தைத்திரிய உபநிடதம் (1.11.1) குறிப்பிடுகின்றது. “கற்றது கைம்மண் அளவு, கலலாதது உலக அளவு” அல்லவா? பட்டம் பெற்றவுடன் பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுவிட்டு, ஆசானுக்கு நன்றி கூறிவிட்டு, கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடுவதே இந்த சடங்குமுறை ஆகும். ஆரம்பகாலத்தில் இந்த சடங்கு குருகுலக் கல்வியை முடித்துவிட்டு திரும்பும் போது மேற்கொள்ளப்பட்டது.
(இதன்பிறகு ஒருவன் திருமண வாழ்க்கையில் ஈடுபட எண்ணங்கொண்டால், அவன் திருமண சடங்கை மேற்கொள்வான். குழந்தை பெற்றவுடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்றமற்ற சடங்குகளையும் தன் குழந்தை(களு)க்கு மேற்கொள்வான்.)

16) இறுதிசடங்கு (அந்தயெஷ்டி) – ஒருவன் வாழ்க்கையின் இறுதிச் சடங்கு என்பது அவன் இறந்துபோனவுடன் அவனின் உடலுக்கு அவனின் சொந்தபந்தங்களும் நண்பர்களும் மேற்கொள்ளும் முக்கிய சடங்காகும். இது அவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தைகளின் உடல் புதைக்கப்பட வேண்டும் எனவும் வாலிப வயதை தாண்டிய பெரியவர்களின் உடல் தகனம் செய்யப்பட வேண்டும் எனவும் ரிக்வேதம் (10:16) அறிவுரைக்கின்றது. இந்த சடங்கு ஓரிரண்டு நாட்கள் முதல் பதினாறு நாட்களுக்கு நீடிக்கின்றது. இறந்தவரின் உடல் நீராடப்பட்டு, புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, கால் கட்டைவிரல்கள் ஒன்றாக கட்டப்பட்டு, நெற்றியில் திலகம் இடப்படுகின்றது. பின்னர் அவரின் உடல் முறையான ஓர் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகின்றது. பதினாறு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு பின்னர் பதினாறாம் நாள் ஏழை எளியவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு உணவு தானம் வழங்கபடுகின்றது. இறந்தவரின் சார்பாக ஏழை எளியவர்களுக்குத் அன்ன தானம் வழங்குவதால், அவரின் ஆன்மா இனிவரும் பிறவிகளில் நற்கதி அடையும்.
இந்த பதினாறு சடங்குகளையும் இந்துக்கள் கட்டாயமாக மேற்கொள்ளவேண்டும் என எந்த சாஸ்திரநூலும் தெரிவிக்கவில்லை. மாறாக அக சடங்குகள் என்று சொல்லப்படும் மேற்கூறிய எட்டு நற்பண்புகள் தான் கட்டாயமானவை. புற சடங்குகளின் உண்மையான அர்த்தங்களை உணர்ந்து, அகசடங்குகளைக் கடைப்பிடித்து, எளிமையான முறையில், தானம் மற்றும் தர்மத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளப்படும் சடங்கு தான் சாலச்சிறப்புடையதாகும். திருமணம், பெயர்சூட்டுதல், தலைமுடி நீக்குதல், போன்ற சில நடைமுறையில் உள்ளன, காலச்சுழற்சியில் மற்ற சில சடங்குகள் அரிதாகி விட்டன.
எவனொருவன் புற சடங்குகளை மட்டுமே மேற்கொண்டு எட்டு அக சடங்குகளையும் மேற்கொள்ளாமல் இருக்கிறானோ அவன் இறைவனோடு ஒன்றாகக் கலப்பதில்லை. அவன் மேற்கொண்ட புற சடங்குகள் அர்த்தமற்றுப் போகின்றன. எட்டு அக சடங்குகளையும் மேற்கொண்டிருப்பவன் நிச்சயமாக இறைவனோடு சேர்கிறான்”
கோயில்கள் பரிகார ஸ்தலங்கள் மட்டும்தானா? 


இன்றைய காலகட்டத்தில் மக்கள் கோயிலுக்கு செல்லும் நோக்கமே மாறியுள்ளது.
கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் ஒவ்வொருவரையும் நீங்கள் ஏன் கோயிலுக்கு வருகிறீர்கள்? என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்தை சொல்கிறார்கள். அதாவது என் மகனுக்கு சீக்கிரம் வேலை கிடைக்கவேண்டும்,என் மகளுக்கு மாமியார் தொல்லை இல்லாத நல்ல திருமண வாழ்க்கை அமையவேண்டும் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அதிலும் இந்த பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கிவிட்டால் கேட்கவே வேண்டாம். இவையெல்லாம் எங்கே போய் முடியும் என்றால் கடவுள் மீது ஒரு வெறுப்பில் சென்றுதான் முடியும். ஏனெனில் நீங்கள் வேண்டிய பலன் ஓரிரு மாதங்களில் துரிதமாக கிடைக்கவேண்டும். இல்லையேல் ஆமா அந்த கோயில் சாமிக்கு நா எவ்வளவோ பூஜை செஞ்சேன் ஜோதிடர் என்னென்ன பரிகாரம் சொன்னாரோ அத்தனையும் ஒன்னுவிடாம செஞ்சேன் ஆனா ஒரு சாமியும் என்னோட வேண்டுதல நிறைவேற்றல. இப்படிப்பட்ட எண்ணங்கள் வர ஆரம்பித்துவிடும்.
இதற்கு என்ன காரணம்?
வாரநாட்களில் பார்த்தோமானால் வியாழன் மற்றும் சனிக்கிழமையில் தான் கோயில்களுக்கு பக்தர்கள் அதிக அளவில் செல்வதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இந்நாட்களில் கோயில்களில் பார்த்தோமானால் கடலை மாலைகளாலும், எள் விளக்குகளாலும் அந்த சன்னிதிகள் தினறிக்கொண்டிருக்கும். அதிலும் கூட சில மக்கள் எள் விளக்கு வாங்குவார்கள். நவகிரக சன்னிதியில் ஏற்றுவார்கள். 9 சுற்று சுற்றுவார்கள்.அப்படியே சென்றுவிடுவார்கள். அது என்ன கோயில், அங்கே யார் மூலவர்?இதெல்லாம் அவருக்கு தேவையற்றது.
சூப்பர் மார்கெட்டில் தனக்கு தேவையான பொருளை எடுப்பதுபோல எனக்கு அஷ்டம சனி/ஏழரைசனி அதனால சனிக்கிழமையில் சனிபகவானுக்கு எள்விளக்கு போடச்சொல்லி ஜோசியர் சொன்னார். எனவே போட்டுட்டுபோரேன். (அதிலும் பலர் கைகளில் ஏந்தியபடி சுற்றி வருவார்கள், கைகளில் ஏந்தி செல்லும்போது விளக்கு திரியில் இருக்கும் தேவதை சாபம் கிடைக்கும்)
அவர்களை கேட்டால் இதான் பதிலாக இருக்கும்.
அதற்கு காரணம் மக்களின் பேராசை, சில ஜோதிடர்களின் அறியாமை.

விளக்கு ஏற்றுவது சரியா?
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் பார்த்தோமானால் இப்பழக்கம் மக்களிடம் குறைவாகவே காணப்பட்டது. குறிப்பாக சென்னை தவிர பிறமாவட்டங்களில் இப்பழக்கம் மிகக்குறைவே.
ராகு காலத்தில் துர்கைக்கு மட்டுமே பெண்கள் இந்த விளக்கு ஏற்றும் பழக்கத்தை கொண்டிருந்தனர் அதுவும் பரிகார ரீதியாகத்தான். ஆனால் இன்று தினசரி கோயிலுக்கு சென்றாலே அக்கோயிலில் எத்தனை சன்னிதி உள்ளதோ அத்தனை விளக்கு ஏற்றுவது என்ற பழக்கம் மக்களிடையே காணப்படுகிறது.இதனால் ஒவ்வொரு சன்னதிகளும் அதிக அகல் விளக்குகளாலும்,எண்ணை சிதறல்களாலும்,அழுக்குகளாலும் அலங்கோலமாக்காணப்படுகிறது. கோயிலில் இறை அருளைப் பெற வருகிறவர்கள் அங்கே அசுத்தத்தை ஏற்படுத்துவதால் அவர்கள் வழிபாடுகள் பலன் அளிக்காமல் கூட போகலாம். இதற்கு என்ன மாற்று என நாம் யோசித்தால்
1.நீங்கள் மாதந்தோறும் ஏற்றும் அகல்தீப எண்ணை/நெய்யை மொத்தமாக அந்த ஆலய வசம் ஒப்படைக்கலாம். அல்லது
2.இதற்காக நீங்கள் செலவு செய்யும் தொகையை அந்த ஆலயத்தின் மின்சார கட்டணம் செலுத்த ஒரு தொகையாக மாதந்தோறும் நீங்கள் கொடுக்கலாம். அல்லது
3.மின்விளக்குகள் வாங்கி கொடுக்கலாம்.
மேற்கண்ட மாற்று ஏற்பாடுகளில் எதை நீங்கள் கடைபிடித்தாலும் நீங்களே விளக்கு ஏற்றிய பலன் நிச்சயம் உண்டு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
ஏன் என்றால் மின்சாரம் இல்லாத காலத்தில் கோயில்களில் இருட்டு அதிகமாக இருக்கும் அதை போக்கவே விளக்குகள் ஏற்றுவது பழக்கமாக இருந்தது.
எனவே பரிகாரம் கூறும் ஜோதிடர்களும் இவ்விஷயத்தை கவனத்தில் கொள்வது அனைவருக்கும் நன்மை பயக்கும்.
இதிலே இன்னொரு விஷயத்தையும் நாம் குறிப்பிட்டாகவேண்டும்.
கோயில்களுக்கு முன்னால் கடை வைத்திருப்பவர்கள் பக்தர்கள் உள்ளே வரும்முன்னே அவர்களை மடக்கி இன்றைக்கு இந்த விசேஷம். இந்த சாமிக்கு இத்தனை விளக்கு போடனும். இந்த பூஜ பொருள் கொண்டுபோகனும்.... அப்படி இப்படி என தங்களுக்கு தெரிந்த /தெரியாத/ இல்லாத விஷயங்களை கூறி சில மக்களை ஏமாற்றிவிடும் வழக்கமும் சில இடங்களில் நான் நேரிலேயே பார்த்துள்ளேன். ஆக மக்களுக்கும் ஆலய வழிபாடுகள் பற்றி நல்ல புரிதல் தேவைப்படுகிறது. மேலும்
இதை செய்தால் இன்ன பலன் என்று கூறினால்தான் மக்கள் செய்கிறார்கள்.
தேன் அபிஷேகம் செய்தால் இன்ன பலன், பௌர்ணமி வழிபாடு செய்தால் இன்ன பலன்.
சங்கடஹர சதுர்த்திக்கு இன்ன பலன் என்று பலனை உத்தேசித்தே மக்களின் வழிபாடு காணப்படுகிறது.
ஆனால் நம் தர்மசாஸ்திரங்கள் விரதங்களையும்,பண்டிகைகளையும்,ஆலய வழிபாடுகளையும் நம் கடமைகளில் ஒரு அங்கமாகவே வைத்துள்ளது. ஒவ்வொருவழிபாடு, விரதம், பூஜைகளுக்கும் ஒரு முறையை சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதுபடி கடைபிடித்தால்தான் நமக்கு அந்த பலன் கண்டிப்பாக கிடைக்கும். காம்ய பக்தி தவறில்லை. ஆனால் 364 நாட்களும் இறை சிந்தனையே இல்லாத ஒருவன் ஒரு நாள் வைகுண்ட ஏகாதசி சொர்கவாசலை பார்தால்போதும் நாம் சொர்கம் சென்றுவிடுவோம் என நினைப்பது பேராசையின் உச்சகட்டமில்லையா?
ஏகாதசி விரதமிருக்க ஒரு முறை உள்ளது. அது படி வருடத்தின் 12 மாதங்களிலும் கடைபிடித்து சொர்கவாசல் தரிசனம் கண்டால் அவர் வைகுண்ட பதவி அடைவார் என்பது திண்ணம். அதை விடுத்து
ஃபாஸ்ட் ஃபுட் (fast food) உணவு போல கோயில்களையும் துரித பலன்தரும் கோயில்களாக நாம் மாற்ற நினைப்பது தவறு.
நீங்கள் நவகிரக வழிபாடுகளை செய்யுங்கள் தவறில்லை. அதற்காக அந்த கோயிலின் மூலவர் அப்பலன்களை தரமாட்டார் என நினைக்காதீர்கள்.
நவகிரகங்களை விட பல கோடி மடங்கு பலன் அளிக்கவல்லவை அக்கோயிலின் மூலவர் என்ற உண்மையை மறந்துவிடாதீர்கள்.
ஆதிசங்கரர் 6 மடங்களை தோற்றுவித்தார். அங்கே நவகிரகம் இல்லை.
ஏனைய சைவ ,வைணவ அடியார்களும் சிவபிரானையும் திருமாலையும் வணங்கினாலே கிரக கோளாறுகள் நீங்கும் என பாடிச்சென்றுள்ளனர்.
நிறைவாக ஒரே வார்த்தை நவகிரக தோஷம் நீங்குவதற்காக,பரிகாரம் செய்வதற்காக மட்டுமே ஆலயத்திற்கு வராதீர்கள். ஆத்மார்த்தமாக இறை சிந்தனையோடு நம் வாழ்க்கை நெறியில் அதுவும் ஒரு கடமையாக நினைத்து ஆலயத்திற்கு வாருங்கள். உங்கள் கவலைகளை ஆண்டவனிடம் இறக்கிவையுங்கள்.
அதன் பிறகு அது அவர் பொறுப்பு.
செல்வவளம் பெருகி நிலைக்க.

இன்றைய வாழ்க்கை சூழலில் செல்வத்தினை சேர்க்க போராடும் மனிதர்களே அதிகம், செல்வத்தினை தேடி ஓடாத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை, திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி. நாமும் செல்வத்தினை சேர்க்க அரும்பாடு படுகிறோம், செல்வத்தினை சம்பாதிப்பதும், அதனை நம்மிடம் நிலைக்க வைப்பதும் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சவாலாகவே விளங்குகிறது. அந்த நிலையினை மாற்றவே சில எளிய செல்வவளம் பெருகி நிலைக்க தாந்த்ரீக முறைகளை இங்கே தெளிவுபடுத்துகிறேன்.
1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.
2. பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும். ( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).
3. நிலக்கரி தனாகர்ஷண சக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.
4. ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).
5. தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.
6. எந்த விஷயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர் அறியாதவாறு "ஓம் ஸ்ரீம் நமஹ இலட்சமாக திரும்பிவா வசி வசி" என்று ஐந்து முறை கூறி செலவிடவும்.
7. முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.
8. மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும்.
9.பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும்.
10. செல்வவளம் பெருகி நிலைக்க பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.
11. மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.
12. குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.
13. வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.
14. செல்வவளம் பெருகி நிலைக்க கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.
15. பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.
16. செல்வவளம் பெருகி நிலைக்க வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.
17. முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.
18. சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்.

செவ்வாய், 11 ஜூலை, 2017

சிறப்பான தேர்ச்சி பெற (தேர்வில்)
நினைவாற்றல் Memory என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது. ஞாபக மறதி ஏற்பட்டால் பல விசயங்களில் பின்தங்கிவிட நேரிடும். அதுவும் பள்ளி (School) மாணவர்களுக்கு (Student) பரிட்சை (Exam) நேரத்தில் அவர்களின் நினைவாற்றல் திறன்தான் கை கொடுக்கும். ஏதாவது ஒருகேள்விக்கு பதில் மறந்து
போனாலே டென்சன் (Tension) ஆகிவிடுவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. எனவே சத்தான உணவுகளை கொடுப்பதன் மூலம் அனைவருக்கும் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
மூளைச் (Brain) சோர்வை தடுக்கும்
அன்றாடம் வீட்டு சமையலில் சீரகம்Cumin, மிளகுPepper ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை குழந்தைகளின்Kids மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப்Food பொருட்களைத் தொடர்ந்து சாப்பிடக் கொடுக்கவேண்டும்.
ஊறவைத்த பாதாம் (Almonds Nuts) பருப்பு
பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் (Nerves) பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலைSkin நீக்கிவிட வேண்டும்.
அக்ரூட், திராட்சை
அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் (Daily) ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். அதேபோல் வேர்க்கடலை சாப்பிட்டாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.
மூளைக்கு சுறு சுறுப்பு
நினைவாற்றல் அதிகரிக்க வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு(Poweder) தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன்Milk சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைகளும், பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். திப்பிலியை வல்லாரை சாறில்Essence ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம்.
க்ரீன் டீ
க்ரீன் டீயில் மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும், ஃபாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான மனநிலை மாறும்.
பெர்ரிஸ்
பெர்ரிப் பழங்களில் குவர்செடின் என்னும் மூளைச் செல்களில் இயக்கத்தை அதிகரிக்கும் பொருள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆந்தோசையனின் என்னும் ஃபோட்டோ கெமிக்கல், அல்சீமியர் என்னும் ஞாபக மறதி நோயை தடுக்கும். அதிலும் சில பெர்ரிப் பழங்களான ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது.
பச்சை இலைக் காய்கறிகள்
பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அவர்கள் சொன்னது பொய்யல்ல உண்மை தான். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
தேன்
தேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஞாபக சக்தியை அதிகரிப்பதும் ஒன்று. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
நட்ஸ்
நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும் நல்லது.
பால் பொருட்கள்
பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இந்த பொருட்களை சாப்பிட்டால், மூளைச் செல்கள் நன்கு செயல்படும். முக்கியமாக தயிரில் அமினோ ஆசிட் தைரோசின் என்னும் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் உள்ளது.
தண்ணீர்
மூளையில் நான்கில் மூன்று பங்கு தண்ணீர் தான் உள்ளது. எனவே தண்ணீர் குறைவானால் மூளையில் செயல்பாடும் குறைந்து, மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும். எனவே அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால், மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச் செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.
இவைகளில் ஏதேனும் சிலவற்றை பரிட்சை முடியும் வரை தினமும் செய்தால் நிச்சயம் பலன் தரும்.